இந்தோனேசியப் படகில் தீ விபத்து ஒருவர் உயிரிழப்பு,172 பேர் மீட்பு!
இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே புதன்கிழமை (12) ஒரு படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், 170-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக மீட்புக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் நிகழ்ந்த இத்தகைய இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
பாதிக்கப்பட்ட பயணிகள் படகிலிருந்து இரண்டு அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 172 பேர் ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பிற கப்பல்கள் மூலம் வெளியேற்றப்பட்டதாக, தேடல் மற்றும் மீட்புப் பணி அதிகாரி மொஹமட் ஹரியாடி கூறியுள்ளார்.
தீப்பிடித்து எரியும் அந்தப் படகில் பயணிகள் அல்லது பணியாளர்கள் யாரும் தற்சமயம் இல்லை என்றும் ஹரியாடி குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
கடந்த வாரம் ஜாவா தீவுப் பகுதியில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
தினசரி போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்காகப் படகுப் போக்குவரத்தை பெரிதும் நம்பியிருக்கும், 17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் கடல்சார் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.