
நீதிக்கான அவசரத்தை வெளிப்படுத்திய பிரித்தானியா!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, நீண்டகாலமாக நீதிக்காகப் போராடிவந்த நிலையில் அண்மையில் உயிரிழந்த டொக்டர் மனோகரனை நினைவுகூர்ந்ததுடன், இது பல குடும்ப உறுப்பினர்கள் தமது அன்புக்குரியவர்களுக்கான நீதி கிட்டாமலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். |
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட 60/L1/Rev.1 எனும் புதிய பிரேரணை, திங்கட்கிழமை (06) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. அதன்படி இணையனுசரணை நாடுகளின் சார்பில் இப்பிரேரணையை பேரவையில் சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு: பேரவையின் இக்கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் உயிரிழந்த டொக்டர்.காசிப்பிள்ளை மனோகரனை இங்கு நினைவுகூருகிறேன். மனோகரன், 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் தனது மகனான ரஜீகர் உள்ளடங்கலாக 5 மாணவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து நீதிக்காக அயராது போராடிவந்த செயற்பாட்டாளராவார். ஐக்கிய நாடுகள் சபையிலும், இப்பேரவையிலும் முன்னெடுத்த பிரசாரம் உள்ளடங்கலாக உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நோக்கில் மனோகரன் முன்னெடுத்த தொடர் முயற்சிகள் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்தன. மனோகரனின் உயிரிழப்பானது பல குடும்ப உறுப்பினர்கள் தமது அன்புக்குரியவர்களுக்கான நீதி கிட்டாமலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது எஞ்சியிருக்கும் தப்பிப்பிழைத்தோர், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் உண்மைக்கும், நீதிக்குமான கோரிக்கை உடனடியாக அணுகப்படவேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் இப்புதிய பிரேரணையானது நீண்டகாலமாக நிலவும் மனித உரிமைகள்சார் கரிசனைகள் மற்றும் பல தசாப்தகால இனமோதலினால் ஏற்பட்ட காயங்களுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் மற்றும் அதுசார்ந்த கடப்பாடு என்பன இப்பிரேரணையின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அத்தோட இக்கடப்பாடுகளை உரியவாறு நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். அதேபோன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வுகள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாகக் காத்திருக்கும் பதில்களை வழங்குவதற்கான இயலுமையைக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்த விசாரணைகள் எதிர்கால அடையாளங்காணல் முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்யக்கூடியவகையிலும், பாதிக்கப்பட்ட நபர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் விதத்திலும் முன்னெடுக்கப்படவேண்டும். அதேவேளை சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதானது யுத்தகால மீறல்களுடன் தொடர்புடைய தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான முக்கிய நகர்வாக அமையும். அத்தோட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மீதான கண்காணிப்புக்கள் மற்றும் ஒடுக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதானது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இன்றியமையாததாகும் என்றார். |