விஞ்ஞானிகளின் திறமையை அவமதிக்காதீர்கள்
கொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிக்கும் செயற்பாடென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அமித்ஷா மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அரசியல் செய்வதற்கு பல்வேறு தளங்கள் இருக்கின்றன. ஏன் மக்களின் உடல்நலன் தொடர்பான விடயங்களில் அரசியல் செய்கிறீர்கள்.
கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும், நமது விஞ்ஞானிகள் கடின உழைப்பால் உருவானவை. நீங்கள் கொரோனா தடுப்பூசியில் அரசியல் செய்தால்,அது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும்.
கொரோனா வைரஸுக்கு எதிராக இந்த தேசம் கடுமையாக போரிட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்த அரசும் மக்களும் இணைந்து செயற்பட்டார்கள். உலகிலேயே கொரோனாவிலிருந்து அதிகமாக மீண்டவர்களும், குறைந்த இறப்பு வீதம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ஒரு நேரத்தில் 130 கோடி மக்கள் உள்ள தேசத்தில் எவ்வாறு கொரோனாவை சமாளிக்கப் போகிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு மக்கள் அளித்த ஒத்துழைப்பால் இது சாத்தியமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.