
பிரதேச செயலகத்துக்கு நீதி வழங்க வேண்டும்!
கல்முனை வடக்கு பிரதேச உப செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருந்தபோதிலும் இன்றுவரை அது தரமுயர்த்தப்படாமை, அதற்கான அதிகாரங்கள் வழங்கப்படாமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசு விசேட குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்து எமக்கான நீதியை வழங்க வேண்டும் என தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார் |
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான குழு நிலை விவாதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 33 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்ட ஒன்றுக்காக நாங்கள் பல தடவைகள் இந்த உயரிய சபையில் பேசியிருக்கின்றோம். ,இந்த அரசின் இதுவரையான ஆட்சியிலும் 3 தடவைகள் பேசியுள்ளேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக ,இந்த பிரதேச செயலகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி சம்பந்தமாக மீண்டும் பேசுகிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக நான் வாய்மூல விடைக்கான நேரத்தில் கேள்விகளை முன்வைத்திருந்தேன். அதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் அடுத்த அமர்வில் பதில் வழங்குவேன் என கூறியிருந்தார். ஆனால் இன்றுவரை பதில் தரவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1989 ஆம் ஆண்டு உப பிரதேச செயலகமாக இருந்தது.அதன் பின்னர் 1993 ஆம் ஆண்டு உப குழுவின் அறிக்கை மூலம் 1993 -09-28 ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியோடு அது முளை அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.அமைச்சரவை அனுமதி பெற்றும் கூட இன்றும் அந்த பிரதேச செயலககத்திற்குரிய அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளது. 33 வருடங்களாக ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகளும் உயரதிகாரத்திலிருந்த செயலாளர் மற்றும் அரச அதிபர்கள் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் நோக்கத்தை அடைவதற்காக அவர்களின் கைக்கூலிகளாக இருந்து அந்த தரமுயர்த்தப்பட்ட பிரதேச செயலகத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய அதிகாரத்தை கொடுக்காமல் இருந்தார்கள்.இன்று 323 ஆளணியினர் வரை கொண்ட அந்த பிரதேச செயலகம் 29 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டது. முழு வளங்களும் கொண்ட பிரதேச செயலகம் ஆகும் என்றார். |