இனவாத யுத்தத்தை மீண்டும் ஏற்படுத்த முயற்சி!

05.12.2024 08:14:25

மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததாக பொய் பிரசாரங்களையும் போலி தகவல்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி, வடக்கையும் தெற்கையும் குழப்பி இனவாத யுத்தத்தை மீண்டும் ஏற்படுத்தவா இவ்வாறு செய்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

   

சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதனால் இந்த சட்டத்தை தயாரித்து அமுலாக்கும்வரை வரை நாட்டில் இனவாதம், மதவாதம் தலைதூக்கும்போது அதனை அடக்குவதற்கு தற்போதுள்ள பயங்கரவாத சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை(04) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரைமீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் நாட்டின் வளங்களை அழித்த மோசடிகாரர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதாகவே உள்ளது.இந்த பிரதான இரண்டு விடயங்களை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகிறோம்.

கடந்த கால ஆட்சியாளர்கள் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க நடவடிக்கைகளை சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள மாத்திரமே பயன்படுத்தினர். ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு செயற்படாது. தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது எமது அரசாங்கத்தின் பிரதான கொள்கை . நாங்கள் பல்வேறு மத கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். அதனால் அனைவரதும் மத கலாசாரத்தை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுவே எமது கொள்கை.

வடக்கு கிழக்கு தொடர்பில் பேசும் போது அவர்கள், நாங்கள் என பிரித்தே பார்க்கிறோம். அந்த மனநிலையை மாற்றி, அவர்கள்தான் நாங்கள் நாங்கள்தான் அவர்கள் என்ற மனநிலையை ஏற்படுத்த வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இலங்கையர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியும். நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டோம். ஆனால் அந்த நிலை யாருக்கும் ஏற்படும்வகையில் எமது அரசாங்கம் செயற்படாது.

இந்நிலையில், அடுத்தவருடம் முதல் காலாண்டில் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது,பணமோசடி,போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட குற்றங்களைத் தடுத்தல் தொடர்பான 3 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன். குற்றவியல் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு, வங்குரோத்து தொடர்பான சட்டமூலம் மற்றும் கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றார்.