இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் (Sihasak Phuangketkeow) நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
கண்டி அஸ்கிரி மகா விகாரையில் நடைபெறும் அரச கடின சீவர பூஜை புண்ணிய உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் அரச பிரதிநிதியாக சிஹாசக் புவாங்கெட்கியோவ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த தாய்லாந்து பிரதிப் பிரதமரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் நீண்டகால கலாசார மற்றும் மத ரீதியான உறவுகளை நினைவுகூர்ந்தவாறு ஜனாதிபதியும் தாய்லாந்து பிரதிப் பிரதமரும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வரலாற்று ரீதியான மத மற்றும் கலாசார உறவுகள் இவ்வாறான இராஜதந்திர விஜயங்களின் மூலம் மேலும் வலுப்பெறும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
தாய்லாந்து பிரதமரும் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பத்துடன் உள்ளதாக பிரதிப் பிரதமர் இதன்போது குறிப்பிட்டதுடன், அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெராவை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வருகை தருமாறு தாய்லாந்து பிரதமருக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்