நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா: பார்ட் 1' திரைப்படம், 32-வது ஆண்டு கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளில்  இரண்டு தொழில்நுட்பப் பிரிவுகளின் இறுதிப் பட்டியலில்  இடம்பிடித்துள்ளது. 

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்  மற்றும் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் இப்படம் தேர்வாகியுள்ளது. தி ஓடிஸி , டியூன்: பார்ட் த்ரீ, ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் படங்களுடன் இப்படம் போட்டியிடுகிறது.
 
சிறப்பு பரிந்துரை குழுவால் 12 தொழில்நுட்ப பிரிவுகளுக்குப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பட்டியலில் இடம்பிடித்திருப்பது இந்திய சினிமாவுக்கும், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கிடைத்த முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது இறுதிப் பரிந்துரை அல்ல.
 
வரும் டிசம்பர் 4, 2026 அன்று இறுதி பரிந்துரைகள் அறிவிக்கப்பட உள்ளன. அதில் 'ராமாயணா' இடம்பெறுமா என்பது அப்போதே தெரியவரும். ஜனவரி 3, 2027 அன்று சான்டா மோனிகாவில் நடைபெறும் விருது விழாவில் இறுதி வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போதைக்கு கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஓடிஸி' 11 பிரிவுகளில் இடம்பிடித்து முன்னிலையில் உள்ளது.