ஜோர்ஜியாவில் கைமீறும் நிலைமை!

01.12.2024 09:11:39

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவை ஜோர்ஜியாவில் மூன்றாவது நாளாக போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை 2028 ம் ஆண்டு வரை ஜோர்ஜியா அதிகாரப்பூர்வமாக கைவிடுவதாக ஜோர்ஜியாவின் பிரதமர் இராக்லி கோபாகிட்ஸே( Irakli Kobakhidze) வியாழக்கிழமை அறிவித்ததை அடுத்து அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடி முற்றுகையில் ஈடுபட்டனர்.

   

அதே சமயம் ஜோர்ஜியா ஜனாதிபதி சலோமி ஜுராபிஷ்விலி தன்னை நாட்டின் நிரந்தர தலைவராக அறிவித்துள்ளார்.

அத்துடன் ஜோர்ஜியாவின் ஒரே பிரதிநிதியாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரே உரிமை தனக்கு மட்டும் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

இது நாட்டு மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் பெரும் போராட்டத்தையும் தூண்டியுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது நாளாக அந்நாட்டின் தலைநகரில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீண்டும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கடுமையான முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிகப்படியான பலத்தை உபயோகப்படுத்தும் ஜோர்ஜியாவின் அரசாங்கத்தின் செயலுக்கு அமெரிக்கா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜோர்ஜியா நாட்டின் அரசாங்கத்துடனான மூலோபாய கூட்டணியை அமெரிக்கா கைவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜோர்ஜியா இணைவது பொதுமக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது.

இதுமட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது அந்த நாட்டின் அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.