
சாமானியன் - விமர்சனம்
'மக்கள் நாயகன்' என்று இன்றும் கிராமத்து ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் ராமராஜன் சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் என்ற ஒற்றை காந்த ஈர்ப்புடனும், எதிர்பார்ப்புடனும் இத்திரைப்படத்தை காண பட மாளிகைக்கு விஜயம் செய்யும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யுமா? செய்யாதா? என்பதை தொடர்ந்து காண்போம்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்று தன்னுடைய கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மேஜர் சங்கர நாராயணன்( ராமராஜன்). இவர் தத்தெடுத்து வளர்க்கும் பெண்ணான நக்ஷா சரண்- தன்னுடன் பணியாற்றும் லியோ சிவகுமாரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு கிராமத்திலிருந்து சென்னைக்கு இடம் மாறுதலாகி வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் பல்வேறு தொல்லைகளை அவர்களுக்கு கொடுக்க அவர்கள் சொந்த வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். இதற்காக தனியார் வங்கி ஒன்றில் கடன் கேட்கிறார்கள்.
முதலில் கடன் கொடுக்க சம்மதிக்கும் அந்த தனியார் வங்கி, பிறகு மக்களிடம் கொள்ளையடிக்கும் தனியார் கட்டுமான நிறுவன அதிபர் ஒருவரின் சதி திட்டத்திற்கு உடன்பட்டு, கடன் கொடுப்பதிலும், கடனை வசூலிப்பதிலும், கெடுபிடியும் நெருக்கடியும் காட்டுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக அந்த இளம் தம்பதிகள் தாங்கள் பெற்றெடுத்த பிஞ்சு வாரிசுடன் வங்கிக்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை அறிந்த மேஜர் சங்கரநாராயணன் வங்கி அதிகாரிகளை சிறை பிடிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் முதல் பகுதி ராமராஜனின் திரை தோன்றல் இருந்தும் ரசிகர்களை இருக்கையில் அமர விடாமல் நெளிய செய்கிறது திரைக்கதை. ஆனால் இரண்டாம் பகுதியில் தனியார் வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கினால் ''அந்த வீடு சொந்தமாக வாங்கிய வீடு அல்ல. அது வங்கியின் வீடு'' என்றும், அது 'வாங்கியவர்களுக்கு சிறை' என்றும் இயக்குநர் உணர்த்தி இருப்பது சிறப்பு. ஆனால் இந்த ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு படத்தை இழுத்தடித்திருப்பது தொய்வை தருகிறது.
ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றுகிறார் என்ற உற்சாகத்துடன் பட மாளிகைக்குச் சென்றால் முதுமையின் காரணமாக அவருக்கு இருக்கும் அசௌகரியங்கள் அப்பட்டமாக திரையில் தெரிவதால் ரசிக்கவும் முடியாமல், பாராட்டவும் முடியாமல் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்ற திட்டமிட்ட ராமராஜன் இதுபோன்ற கதையை தெரிவு செய்திருப்பது ஏன்? என்பதுதான் புரியவில்லை.
ராமராஜன் - இளையராஜா கூட்டணி என்ற எதிர்பார்ப்பும் இருந்ததால் பாடல்களாவது சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதிலும் நிறைவில்லை. அதிலும் ராமராஜனை மீண்டும் பாட்டுப் பாடி பால் கறக்க சொல்லும் காட்சி நமுட்டு சிரிப்பு.
எம். எஸ். பாஸ்கர், ராதாரவி போன்றோர் ராமராஜனின் நண்பர்களாக நடித்திருப்பதும், அவர்களுடைய கெட்டப்பும் சிறப்பு. லியோ சிவக்குமார் நக்க்ஷா சரண் இளம் ஜோடிகளின் காதலும், குறும்பும் இளம் தலைமுறை ரசிகர்களுக்கு ஆறுதல்.
முதல் பாதியில் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லாமல் திரைக்கதை பயணிப்பதால் ரசிகர்களுக்கு அயர்ச்சி ஏற்படுகிறது. இரண்டாம் பகுதியில் அழுத்தமான சென்டிமென்ட் மட்டுமே இடம்பிடித்து இருப்பது சில பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கிறது.