அமெரிக்க இராணுவ உயர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் பரிந்துரை

17.06.2022 06:12:20

அமெரிக்க ராணுவ தலைமையகமான 'பென்டகனில்' உள்ள உயர் பதவி ஒன்றுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ராதா அய்யங்கார் பிளம்ப்பை, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ராதா அய்யங்கார் பிளம்ப். இவர், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலையில், பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலையில், பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார்.

பின் லண்டன் பொருளாதார பள்ளியில் துணை பேராசிரியராக பணியாற்றினார். அமெரிக்க அரசு பணியில் சேருவதற்கு முன், 'கூகுள் மற்றும் பேஸ்புக்' நிறுவனங்களின் கொள்கைப் பிரிவு இயக்குனராக பணியாற்றினார்.

அமெரிக்க அரசு பணியில் சேர்ந்த பின், ராணுவம், எரிசக்தி துறை, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பல உயர் பதவிகளை வகித்தார்.தற்போது, அமெரிக்க ராணுவ துணை அமைச்சரின் அலுவலக பணியாளர்கள் பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார். 

இவரை, ராணுவ தலைமையகமான பென்டகனில், சார்பு செயலர் என்ற உயர் பதவியில் நியமிக்க, அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.