கொழும்பு வடிகால்களைக் கூட சுத்திகரிக்க முடியாத அரசாங்கம்!

09.11.2026 08:58:25

ஆறு மாதங்களில் கொழும்பு நகரில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால், குறைந்தபட்சம் நகரின் வடிகால்களைக் கூட முறையாகச் சுத்திகரிக்க முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

 

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (08) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பெய்த கனமழையினால் கொழும்பு நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியமையைச் சுட்டிக்காட்டிய அவர், கொழும்பு நகரின் வடிகால் அமைப்பு வெறும் 30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்கக்கூடிய கொள்ளளவைக் கொண்டுள்ளதாகக் கொழும்பு மாநகர மேயர் தெரிவித்துள்ளார். நிபுணர்களின் கருத்துப்படி, நீரேற்றம் மற்றும் நீர் வடிந்தோடுவதில் ஏற்படும் பிரச்சினைகளே இந்த வெள்ளப்பெருக்குக்கு முக்கிய காரணம் என்பதால், வடிகால் அமைப்பை உடனடியாகச் சீரமைத்து முறையான பராமரிப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த கால மழைவீழ்ச்சி தரவுகளுடன் தற்போதைய நிலையை ஒப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், சுமார் 120 மில்லிமீற்றர் மழைக்கே நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்கள தரவுங்களின்படி, 1993 ஆம் ஆண்டில் 493.7 மில்லிமீற்றரும், 2010 ஆம் ஆண்டில் 440.2 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த போதிலும், இத்தகைய கடுமையான வெள்ளப்பாதிப்புகள் ஏற்படவில்லை. கொழும்பு நகரின் வடிகால் அமைப்பு முறையாக அபிவிருத்தி செய்யப்படாமையும், கழிவுகள் அகற்றப்படாமையுமே தற்போதைய அவசர பேரிடர் நிலைமைக்கு முதன்மைக் காரணம் ஆகும்.புவியியல் காண்

ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தில் இருந்திருந்தால் சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் பின்பற்றும் நவீன மழைநீர் வடிகால் அமைப்புகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது. விரிவான வடிகால் கட்டமைப்பு, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் சேகரிப்புத் தொட்டிகள், நவீன பம்பிங் மற்றும் திசைத்திருப்பல் முறைகள், பசுமை உட்கட்டமைப்பு மற்றும் கால்வாய்களை அகலப்படுத்துதல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை நமது நாட்டிற்கு ஏற்றவாறு தழுவிப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான வெள்ளப் பெருக்குகளைக் கட்டுப்படுத்த முடியும்.

இறுதியாக, அரசியல் ரீதியாக ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டாமல் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சியை புறந்தள்ளிவிட்டு இதற்கான தீர்வுகளைக் காண முடியாது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள அரசாங்கம் இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளை நிறைவேற்றத் தவறியுள்ள நிலையில், மக்கள் பொய்யான வார்த்தை மாயங்களுக்கு ஏமாறாமல் உண்மையான நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளுக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.