புதிய வரலாற்றை எழுதியுள்ளனர் இலங்கை மக்கள்!

27.09.2024 08:32:41

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புகள் இலங்கை இறைமை கௌரவம் பாதுகாப்பு அபிவிருத்தி ஆகியவற்றை பாதுகாப்பதற்கு உதவும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தெரிவித்துள்ளார்.

   

சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு 75 வருடங்களாகியுள்ளதை குறிக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் சீன தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிற்கும் இடையிலான நெருக்கமான ஆழமான ஒத்துழைப்பு காணப்பட்டால் இலங்கையால் தனது இறைமை கௌரவம் பாதுகாப்பு அபிவிருத்தி ஆகியவற்றை அதிகளவிற்கு பாதுகாக்க முடியும் என்பதையும், இலங்கையால் பிராந்திய சர்வதேச விவகாரங்களில் மேலும் அதிகளவு பங்களிப்பு செய்ய முடியும் என்பதையும் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஆற்றியுள்ள முதலாவது உரையில் சீன தூதுவர் இலங்கை மக்கள் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளனர். அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் மூலம் புதிய வரலாற்றை எழுதுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

சீனா மற்றும் பிற நட்புநாடுகளின் ஆதரவு உதவியுடனும் ஜனாதிபதியின் வலுவான தலைமைத்துவம் இலங்கையின் விடாமுயற்சி புத்திசாலித்தனம் வீரம் நிறைந்த மக்கள் மூலமும் இலங்கை நிச்சயமாக அனைத்து ஆபத்துகளையும் சவால்களையும் வெற்றிகொள்ளும் என கருதுவதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.