ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி.

04.07.2025 08:32:24

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, அமெரிக்க காங்கிரஸ் வியாழக்கிழமை (03) அவரது 4.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வரி குறைப்புக்கள் மற்றும் செலவுக் குறைப்புகளுக்கான ஒரு பெரிய சட்டமூலத்தை நிறைவேற்றியது.

 

குடியரசுக் கட்சி தலைமையிலான சபை இந்த சட்டமூலத்தை 218–214 என்ற குறுகிய வாக்குகளில் நிறைவேற்றி கையொப்பமிட அவருக்கு அனுப்பியது.

இந்த வாக்கெடுப்பு, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவருக்குக் கிடைத்த ஒரு பெரிய சட்டமன்ற வெற்றியைக் குறிக்கிறது.

அவரது குடியேற்ற ஒடுக்குமுறைக்கு நிதியைப் பெறுதல், அவரது 2017 வரி குறைப்புகளை நிரந்தரமாக்குதல் மற்றும் 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் உறுதியளித்த புதிய வரிச் சலுகைகளை வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (04) மாலை 5 மணிக்கு சட்டமூலத்தில் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப்,

ஒரு பெரிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது ஒரு வரலாற்று சாதனை, இது இந்த நாட்டை ரொக்கெட் வேத்தில் முன்னேக்கி கொண்டு செல்லப்போகிறது, இது மிகவும் சிறப்பாக இருக்கும் – என்று கூறினார்.

பெரிய அழகான சட்டமூலம்

800க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த சட்டம், ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது.

‘பெரிய அழகான சட்டமூலம்’ என்று அழைக்கப்படும் ட்ரம்பின் புதிய வரி மற்றும் செலவின சட்டமூலம், நிரந்தர வரி குறைப்புகளுடன் கூட்டாட்சி செலவினங்களில், குறிப்பாக பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் பெரும் ஊக்கங்களை இணைத்து, சமூகப் பாதுகாப்பு வலைத் திட்டங்களை சீர் செய்யும் ஒரு விரிவான சட்டமன்றத் தொகுப்பாகும்.

 

இந்த சட்டமூலத்தின் மையத்தில், 2017 ட்ரம்ப் சகாப்த வரி குறைப்புகளை நிரந்தரமாக்குவதற்கான உந்துதல் உள்ளது.

ஏனெனில் அவை தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியாக உள்ளன.

நீட்டிக்கப்பட்ட வரிச் சலுகைகளுடன், இந்த சட்டமூலம் எல்லைப் பாதுகாப்பு, இராணுவம் மற்றும் எரிசக்தி திட்டங்களுக்கான நிதியை கணிசமாக அதிகரிக்கிறது.

இந்த சட்டமூலத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று 350 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எல்லை மற்றும் தேசிய பாதுகாப்புத் திட்டம்.

இதில் அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவரை விரிவுபடுத்த 46 பில்லியன் அமெரிக்க டொலர்கள், 100,000 புலம்பெயர்ந்தோர் தடுப்புப் படுக்கைகளுக்கு 45 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் குடியேற்ற அமுலாக்கத்திற்கான ஒரு அதிரடிப் பணியமர்த்தல் என்பன உள்ளடங்கும்.

 

அதேநேரம், இந்த சட்டமூலும் சமூகப் பாதுகாப்பு சலுகைகள் மீதான வரிகளை இரத்து செய்யவில்லை.