பொதுக்கட்டமைப்பு இன்று கூடுகிறது!
ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியில் அங்கம்வகிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அக்கூட்டணியின் சார்பிலேயே களமிறங்குவதென உறுதியாகத் தீர்மானித்துள்ளன. |
புதன்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடிய ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு, எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி விரிவாக ஆராய்ந்தது. இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியில் அங்கம்வகிக்கும் பல்வேறு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சுரேஷ் பிரேமசந்திரன், ஸ்ரீகாந்தா, சிவநேசன், வேந்தன் உள்ளிட்ட 15 பேர் கலந்துகொண்டிருந்தனர். அதன்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டு, இறுதியில் ஜனநாயகத் தமிழ் தேசியக்கூட்டணியின் சார்பிலேயே பொதுத்தேர்தலில் களமிறங்குவது என உறுதியாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேவேளை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலை இலக்காகக்கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொதுச்சபையினருடன் வியாழக்கிழமை கலந்துரையாடுவதற்கும், அவர்களுடைய நிலைப்பாடுகளைக் கேட்டறிவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதேபோன்று தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைத்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்துப் பரிசீலிப்பீர்களா என ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சித்தார்த்தனிடம் வினவியபோது, தாம் அதில் பங்கேற்கமாட்டோம் எனவும், ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியிலேயே போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார். மேலும் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு, தமது கூட்டணியில் சின்னமாக 'குத்துவிளக்கு' இருக்கின்ற போதிலும், அதுபற்றி அடுத்தகட்டக் கூட்டங்களில் உறுதியாகத் தீர்மானிக்கப்படும் என்றார். |