அரசைப் பாதுகாக்கும் சட்டத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும்!

08.10.2026 09:01:34

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் உள்ளடக்கமானது இதனை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுடன் ஒப்பிடுகையில், பாரிய வேறுபாடுகளைக் கொண்டிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (6) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதியாக அங்கம் வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் கரிசனைகளை வெளிப்படுத்தி ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட குழுவில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதியாக அங்கம் வகித்ததாகவும், இப்போது அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை முழுமையாகப் பரிசீலித்ததன் பின்னரே அதில் கரிசனைக்குரிய மாற்றங்களை அவதானித்ததாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த மாற்றங்கள் குறித்தோ, அவற்றுக்கான காரணங்கள் குறித்தோ அல்லது இதனை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட விசேட குழுவின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் இவற்றை உட்சேர்த்தது யார் என்பது பற்றியோ குழுவுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று தடுப்புக்காவல் காலத்தை வரையறுத்தல் மற்றும் சந்தேக நபருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லாதவிடத்து பிணை வழங்குவதற்கு நீதவானுக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பல சரத்துக்களுக்கு விசேட குழு ஒப்புதல் அளித்திருந்ததாகவும், இருப்பினும் பயங்கரவாதம் எனும் பதத்துக்கான வரைவிலக்கணம், நிர்வாகத் தடுப்புக்காவல் மற்றும் அமைப்புக்களைத் தடைசெய்வதற்கான அதிகாரம் ஆகிய மூன்று விடயங்களில் பெரும்பான்மை அடிப்படையிலான குழுவின் அறிக்கையுடன் தான் உடன்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் பயங்கரவாதம் எனும் பதத்துக்கான வரைவிலக்கணம் மிகப் பரந்துபட்டதாக இருப்பதாகவும், இது அதிகாரிகள் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளிக்கும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதாகவும் கரிசனை வெளியிட்டுள்ள சாலிய பீரிஸ், நிர்வாகத் தடுப்புக்காவல் மற்றும் அமைப்புக்களைத் தடைசெய்தல் என்பவற்றுக்கான அதிகாரங்கள் நீதித்துறை அதிகாரிகள் வசமே இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து எச்சரித்துள்ள அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போன்றே இச்சட்டமும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் தவறாக பிரயோகிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.