இனப்பரம்பலை மாற்றும் சண்டித்தனம் .
|
மகாவலி அதிகார சபை இந்த நாட்டில் அரசாங்கத்துக்கும் கட்டுப்படாமல் வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் எண்ணத்தோடு தன்னிச்சையாக செயற்படும் ஓர் அமைப்பாகவே செயற்படுகிறது. சண்டித்தன செயற்பாடுகளில் ஈடுபடுவது மகாவலி அதிகார சபை தான் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டினார்.
|
|
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் அத்துமீறி அமைக்கப்படும் உப்பளம் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக முல்லைத்தீவில் குரல் எழுப்பி வருகின்றோம். இது தொடர்பில் மாவட்டச் செயலாளர்,கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் தடுத்து நிறுத்துவதற்குரிய கடிதங்கள் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறான சண்டித்தன செயற்பாடுகளில் ஈடுபடுவது மகாவலி அதிகார சபை தான். இது தொடர்பாக கடந்த 2026.03.12 ஆம் திகதியன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கமத்தொழில்,கால்நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்பட்டது. குறித்த பகுதி தனியார் காணியில் அமைக்கப்படவில்லை என மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரால் அன்றைய தினம் குறிப்பிடப்பட்டது.அமைச்சர் அவர்களால் இப்பிரச்சினையை மாவட்டச் செயலாளர் தலைமையில் ஆராயுமாறு அன்றைய நாள் அமைச்சரால் பணிக்கப்பட்டது. பின்னர் எமது,கோரிக்கைக்கு அமைய, மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரின் உத்தரவுக்கு அமைய குறித்த பகுதி தனியார் காணியே என நில அளவை அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், தனியார் காணியில் அமைக்கப்படும் மேற்படி உப்பளம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு 2026.07.28 ஆம் திகதியன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் இலங்கை மகாவலி அதிகார சபை அதற்கு இணங்காத வகையில் தன்னிச்சையாக செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.மகாவலி அதிகார சபை இந்த நாட்டில் அரசாங்கத்துக்கும் கட்டுப்படாமல் வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் எண்ணத்தோடு தன்னிச்சையாக செயற்படும் ஓர் அமைப்பாகவே செயற்படுகிறது. கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் அடாத்தாக அமைக்கப்பட்ட உப்பளமும் அதற்கு ஒரு சான்று என மீண்டும் பதிவுசெய்கிறேன். தேவைப்பட்டால் இவற்றுக்கான சான்றுகளை உரிய தரப்பினர்க்கு வழங்குவோம் எனவும் தெரிவிக்கின்றேன் என்றார். |