ஐபிஎல் கிரிக்கெட் போட்டி
அபுதாபியில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு 31-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
பெங்களூரு அணி இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் நடந்த 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி உள்ளனர்.
முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், கைல் ஜாமிசன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், புதிய வரவான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். கொல்கத்தா அணி முதல் பாதியில் 7 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டு 4 புள்ளிகளுடன் 7-வது இடம் வகிக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஒருசேர ‘கிளிக்’ ஆகாததால் வெகுவாக தடுமாறியது. நிதிஷ் ராணா தவிர மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை.
சுப்மான் கில், கேப்டன் மோர்கன், ஆந்த்ரே ரஸ்செல், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் கைகொடுத்தால் 2-வது பாதியில் எழுச்சி பெற முடியும். ஹர்பஜன்சிங், குல்தீப் யாதவ், சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன் என்று சுழல் ஜாலங்களுக்கு அந்த அணியில் பஞ்சமில்லை.
அமீரக ஆடுகளங்கள் ஓரளவு மெதுவான தன்மை கொண்டவை என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கொல்கத்தா அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹஸ்சி கூறுகையில், ‘இதுபோன்ற இக்கட்டான நிலையை மாற்றி வெற்றிப்பாதைக்கு திரும்பிய அனுபவம் எங்களுக்கு உண்டு. மீண்டும் அதே போல் எங்களால் வெற்றிக்கோட்டில் பயணிக்க முடியும். அதற்குரிய திறமை எங்கள் அணியிடம் இருக்கிறது’ என்றார்.