கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது!

02.09.2025 08:21:07

நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும், பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யுத்தத்தை காரணியாக கொண்டு பெருமளவிலான காணிகள் கைப்பற்றப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. நாட்டில் யுத்த அச்சுறுத்தல் ஏதும் இனி கிடையாது. விடுவிக்க கூடிய சகல காணிகளையும் விடுவிப்பேன். வடக்கு மக்களுக்கு அவரவரின் காணி உரிமை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை திங்கட்கிழமை (01)ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

விலகி மற்றும் பிரிந்திருந்த என்மை ஒன்றிணைத்த தீர்மானமிக்க தேர்தலாகவே நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் அமைந்திருந்தது. எமக்கு முன்னால் உள்ள சவால்கள் அனைத்துக்கும் ஒன்றிணைந்தே நாம் முகங்கொடுக்க வேண்டும்.

எமது பிள்ளைகள் பிளவுப்பட்டிருக்கும் வகையிலான நாட்டை மீண்டும் உருவாக்க கூடாது. வடக்கு,கிழக்கு மற்றும் தெற்கு என்ற வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். வடக்கு மாகாணத்தில் பெரும்பாலானோர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அவர்களுக்கான காணி உரிமையை வழங்க வேண்டும்.

யுத்தத்தை காரணியாக கொண்டு பெருமளவிலான காணிகள் கைப்பற்றப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. நாட்டில் யுத்த அச்சுறுத்தல் ஏதும் கிடையாது.

யுத்தம் என்பதொன்று மீண்டும் தோற்றம் பெறும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு பொதுமக்களின் காணிகளை தொடர்ந்து கையகப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. யுத்தம் தோற்றம்பெறுவதை தடுக்கும் வகையில் தான் எமது அரசாங்கம் செயற்பட வேண்டும்.

ஒருசில அரசாங்கங்கள் யுத்தம் மீண்டும் தோற்றம் பெறும் என்ஞ நினைத்துக் கொண்டு காணிகளை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.விடுவிக்க கூடிய காணிகள் மற்றும் திறக்க கூடிய வீதிகள் அனைத்தையும் மக்களுக்கு வழங்குவோம்.

வடக்கு மாகாண மக்களின் பிறிதொரு ஜீவனோபாயமாக கடற்றொழில் காணப்படுகிறது.மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.அதற்காகவே மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எதிர்வரும் காலங்களில் மேலும் பல மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும். நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும்,பாதுகாக்கப்படும் என்றார்.

அதேவேளை நேற்று ஜனாதிபதி கச்சதீவுக்கும் சென்றிருந்தார்.