நீதித்துறை சுயாதீனத்தில் தலையீடு செய்யும் நோக்கம் கிடையாது!

25.07.2026 08:03:02

கடந்தகால படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் எதிர்க்கட்சியினர் அனைவரும் இன்று ஒன்றிணைந்து நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்று போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். நீதிக்கட்டமைப்பு விரைவாக செயற்படுவதை இவர்கள் விரும்புவதில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையீடு செய்யும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என துறைமுகம், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

    

 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதியமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.

அமைச்சரின் எண்ணத்துக்கு அமைய அரச சேவைக்கு ஆட்களை இணைத்துக் கொள்ள முடியாது. கடந்த காலங்களில் அவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கலாம். தற்போது அவ்வாறான நிலை ஏதும் கிடையாது. சிறைச்சாலை ஜெயிலர் பதவியில் 14 வெற்றிடங்கள் காணப்பட்ட நிலையில் 13 வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரச சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் முறையான வழிமுறைகளில் தான் நியமனங்களை வழங்க முடியும்.அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகால பகுதிகளில் இந்த வெற்றிடங்கள் காணப்பட்டன. அவற்றில் பெரும்பாலான வெற்றிடங்களுக்கு இந்த இரண்டு ஆண்டுகால பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நீதியமைச்சர் நீதிக்கட்டமைப்பின் சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. நீதியமைச்சரினால் கடந்த ஆண்டு 26 சட்டங்களும், இந்த ஆண்டு இதுவரையில் 14 சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முற்போக்கான சட்டங்களை இயற்றுவதற்கு நீதியமைச்சர் முன்னிலை வகிப்பதால் அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

கடந்தகால படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் எதிர்க்கட்சியினர் அனைவரும் இன்று ஒன்றிணைந்து நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்று போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். நீதிக்கட்டமைப்பு விரைவாக செயற்படுவதை இவர்கள் விரும்புவதில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையீடு செய்யும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.