இறுதி ஓவரில் தோனியின் ருத்ர தாண்டவம்
டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 14-வது ஐபிஎல் சீசனின் முதலாவது தகுதி சுற்று போட்டியானது டுபாயில் நடைபெற்றது.
இதில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது.டெல்லி அணியில் ப்ரித்வி ஷா மற்றும் கேப்டன் பண்ட ஆகியோர் அரைசதம் விளாசினார்.
173 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். முதல் ஓவரின் நான்காவது பந்தில் போல்டானார். அதனையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா டேலி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அதுமட்டுமின்றி ருதுராஜ் கெய்க்வாட் உடன் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தார்.
10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்கள் எடுத்திருந்தது. உத்தப்பா அரைசதம் அடித்து 51 ஓட்டங்களும், ருதுராஜ் 27 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். சென்னை பேட்டிங் நல்ல நிலையில் சென்றுகொண்டிருந்தபோது டாம் கரன் பந்தில் ஷ்ரேயஸ் ஐயரின் சிறப்பான கேட்ச்சில் உத்தப்பா 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து அதிர்ச்சிகரமான ஷர்துல் தாக்குர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அது பலனளிக்கவில்லை.
முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் அம்பதி ராயுடு அடுத்த ஓவரில் 1 ஓட்டத்துக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் ஸ்டாரு தடுமாற்றம் காணப்பட்டது.
கடைசி 12 பந்துகளில் 24 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆவேஷ் கான் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் (70) ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தல தோனி களமிறங்கினார். விக்கெட் விழுந்த அடுத்த பந்திலேயே மொயீன் அலி பவுண்டரி அடித்து நெருக்கடியை சற்று தணித்தார்.
தோனி வந்து இறங்கியவுடன் இரண்டாவது பந்திலேயே மிரட்டல் சிக்ஸர் அடித்து அதகளப்படுத்தினார். கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஸ்டிரைக்கில் மொயீன் அலி. கடைசி ஓவரை ககிசோ ரபாடா வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாம் கரனிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பந்த்.
முதல் பந்திலேயே மொயீன் அலி 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டத்தில் விறுவிறுப்பு நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. அடுத்த பந்து டாம் கரனுக்கு ஹாட்ரிக் பந்து. ஆனால், தோனி பவுண்டரி அடித்தார்.
அடுத்த பந்தும் 'எட்ஜ்' பட்டு பவுண்டரி போக கடைசி 3 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அடுத்த பந்து வைடாக வீசப்பட்டது. 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் தேவை. ஆனால், தோனி பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 6 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 18 ஓட்டங்கள் விளாசினார். இதன் மூலம் சென்னை அணி ஐபிஎல் தொடரில் 9 வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.