பிறந்தநாள் வாழ்த்துக்கு மம்முட்டி நன்றி

09.09.2021 10:15:02

மலையாள நடிகர் மம்முட்டி நேற்று தனது 70வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து மம்முட்டி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:

முதலமைச்சர் முதல் பல்வேறு தலைவர்களும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அமிதாப் பச்சன், மோகன்லால், கமல்ஹாசன் உட்பட பல நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரையுலகத்தினர், ஊடக நண்பர்கள், பதிப்பகங்கள், தொலைகாட்சி சேனல்கள், டிஜிட்டல் ஊடகங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் மூலம் தங்கள் அன்பை தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக பிறந்தநாளை நான் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. ஆனால், எனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என லட்சக்கணக்கானவர்கள், என்னை தங்களது குடும்பத்தில் ஒருவராய் நினைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதை பெரும் பேறாக கருதுகிறேன். எனது தாழ்மையான நன்றிகளையும், அன்பையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த வரை, தொடர்ந்து உங்கள் அனைவரையும் சினிமாவில் மகிழ்விக்க விரும்புகிறேன். இவ்வாறு எழுதியிருக்கிறார்.