தாய்லாந்து – கம்போடியா போர்நிறுத்தம் நிச்சயமற்ற நிலையில்!

29.07.2025 07:54:13

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக திங்களன்று (28) இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை கம்போடியா “வேண்டுமென்றே” மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியுள்ளது.

 

இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையிலும் பகிரப்பட்ட எல்லையில் ஐந்து நாட்கள் குண்டுவீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்திற்கு இது ஒரு நிலையற்ற தொடக்கமாக அமைந்துள்ளது.

தாய்லாந்து இராணுவம் நள்ளிரவுக்குப் பிறகு துப்பாக்கிச் சூட்டை நிறுத்தியதாகக் கூறுகிறது.

ஆனால் இன்று காலை வரை “பல இடங்களில்” கம்போடியத் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வந்தாக அது கூறுகிறது.

 

அதேநேரம், நள்ளிரவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே “எந்த ஆயுத மோதல்களும் இல்லை” என்று கம்போடியாவின் பாதுகாப்பு அமைச்சு AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்த உள்ளூர் தளபதிகளுக்கு இடையிலான சந்திப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் ஒரு கம்போடிய சிப்பாய் மோதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே நூற்றாண்டு பழமையான சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பாக பதற்றங்கள் கடந்த வாரம் அதிகரித்தன.

 

கடந்த வாரம் ஐந்து தாய் வீரர்கள் கண்ணிவெடி வெடிப்பில் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவை முழு அளவிலான மோதலாக மாறியது.

தாய்லாந்து தனது எல்லையின் சில பகுதிகளை மூடி, கம்போடிய தூதரை வெளியேற்றி, புனோம் பென்னிலிருந்து தனது தூதரை திரும்ப அழைத்தது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், கம்போடியா தாய்லாந்தின் மீது பல ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அடுத்த நாட்களில் இரு தரப்பினரிலும் அதிகமான பொதுமக்கள் இறந்தனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

 

போர் நிறுத்தத்திற்கான காலக்கெடுவான திங்கட்கிழமை (28) நள்ளிரவு வரை இரு படைகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டைகள் தொடர்ந்தன.

தாய்லாந்து கம்போடிய நிலைகள் மீது மேலும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.