அனுராதபுரத்தில் சிவன், இராமர், சீதை கோவில்கள் அமைக்க இடமளிக்க கூடாது!
|
அநுராதபுரம் நகர திட்டத்தில் ஏனைய மத தலங்களை நிர்மாணித்து புனித நகரில் பௌத்தத்துக்கு வழங்கியுள்ள முன்னுரிமையை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அநுராதபுரம் நகரில் சிவன், இராமர் மற்றும் சீதை கோயில்களை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிங்கள பௌத்தர்கள் இதனை அலட்சியப்படுத்தக் கூடாது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். |
|
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அநுராதபுர புனித நகரத்தை அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மதத்தின் மீது நம்பிக்கையில்லாத ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் தான் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. புனித நகரமான அநுராதபுரம் நகரில் சர்வமதங்களையும் உள்ளடக்கி பௌத்தத்தை குளறுபடியாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.அநுராதபுரம் நகரில் சிவன் கோயிலையும், இராமர் கோயிலையும், சீதை கோயிலையும் நிர்மாணிக்க முயற்சிக்கிறது. புனித நகரமான அநுராதபுரத்தில் ஏனைய இந்து மத கோயில்களை நிர்மாணித்து பௌத்த மதத்துக்குரிய நிலையை இரண்டாம் பட்சமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கம் பௌத்த மதத்தை அவதிக்கும் வகையில் தான் செயற்படுகிறது. பௌத்தர்கள் இவ்வாறான செயற்பாட்டை அலட்சியப்படுத்தக்கூடாது.ஏனைய மதங்களுக்கு முன்னுரிமை வழங்குதாக குறிப்பிட்டுக் கொண்டு பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறது. அபிவிருத்தி என்ற பெயரில் புனித நகரமான அநுராதபுர நகரில் கட்டுமாண பணிகளை முன்னெடுத்தால் புராதான தொல்பொருள் சின்னங்கள் சிதைவடையக்கூடும். சிங்கள பௌத்தர்களின் தொன்மையான தொல்லியல் மரபுரிமைகளை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.இவ்வாறான செயற்பாடுகளுக்கு சிங்கள பௌத்த மக்கள் இடமளிக்க கூடாது என்றார். |