இன்று இலங்கை வரும் IMF உயர்மட்டக் குழு!

02.10.2024 08:11:00

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அதன்படி, இன்று வருகை தரும் நிதியத்தின் ஆசிய பசுபிக் துறையின் பணியப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் அக்டோபர் 4 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள்.

இதன்போது, அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர்.

இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக IMF இன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், IMF வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.