தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம்,
காவிரி நீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற தமிழக விவசாயிகள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து ரயில மூலம் டெல்லிக்கு சென்ற விவசாயிகள், நாளை ஆகஸ்ட் 4-ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
விவசாயிகளின் இந்த திட்டத்தை முன்கூட்டியே அறிந்த மத்திய மற்றும் மாநில அரசுகள், அவர்கள் பயணம் செய்த ரயிலை நாக்பூரிலேயே தடுத்து நிறுத்தி அவர்களை வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. டெல்லிக்கு போராட சென்ற விவசாயிகளைப் பாதியிலேயே மகாராஷ்டிர காவல் துறையைக் கொண்டு தடுத்து நிறுத்தியுள்ள செயல் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் உரிமைக் குரலை ஒடுக்க நினைக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.