பரிந்துரைகளை சமர்ப்பித்தால் இந்த ஆண்டு தேர்தல்!
|
மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தலாம் என்று ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தாமதமில்லாமல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த ஆண்டுக்குள் மாகாணாசபைத் தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். |
|
மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் சகல தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தம் செய்து தற்போது வழக்கில் உள்ள 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கமைய தொகுதி, எல்லை நிர்ணய முறைமை இதுவரையில் நிறைவுப்படுத்தாத காரணத்தால் சகல மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தற்போது இயங்குகிறது.நாட்டுக்கு கலப்புத் தேர்தல் முறைமை பொறுத்தமானதாக அமையும் என்று முன்னாள் பிரதமர் தினேஷ் குணவ்ரதன தலைமையில் செயற்பட்ட தேர்தல் திருத்த முறைமை தொடர்பான பாராளுமன் ற தெரிவுக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். தேர்ல் முறைமை மற்றும் தேர்தல் சட்டத்தின் குறைகளை அவதானத்து அதற்குரிய திருத்தங்களை முன்வைக்க 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழு 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் செய்து அதன் பின்னர் சட்ட வரைவை தயாரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரையில் விகிதாசார தேர்தல் முறைமையின் தேர்தலை நடத்தலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டது. எல்லை நிர்ணயம் மற்றும் தொழில்நுட்ப காரணிகளால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் பிரச்சினை காணப்பட்டது. மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறைமையில் நடத்துவதா என்ற பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை வியாக்கியானம் வழங்கியுள்ளது. இவ்வாறான பின்னணியில் மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது பற்றி ஆராய்வதற்கு தற்போது விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு முழுமையாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னிலையாகி எமது தரப்பு யோசனைகளையும் முன்வைக்கவுள்ளோம். இந்த குழு நியமிக்கப்பட்டு மூன்று மாதகாலத்துக்குள் விதப்புரை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆகவே தாமதமில்லாமல் ஆராய்வுகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகிறோம்.இதற்கமைய மூன்று மாதகாலத்துக்குள் அறிக்கை சமர்ப்பித்தால் இந்த ஆண்டுக்குள் மாகாணாசபைத் தேர்தலை நடத்தலாம். இந்த விசேட செயற்குழு 03மாத காலத்துக்குள் யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் எதிர்வரும் மே மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். செயற்குழு அறிக்கை சமர்ப்பித்தவுடன் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை சட்டத்தின் அதிகாரத்துக்கமைய முன்னெடுப்போம். தேர்தலை விரைவாக நடத்தி மாகாணசபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார். |