ஆளும்கட்சி எம்.பியின் அழுத்தத்தினாலேயே பிக்குகளுக்கு எதிராக வழக்கு!

16.01.2026 14:00:00

திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய அழுத்தத்தினாலேயே பிக்குகளுக்கு எதிராக வழக்கு போடப்பட்டுள்ளது. இறுதியில் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளே சிக்கலில் மாட்டிக் கொள்ளப்போகின்றார்கள் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

திருகோணமலை பிரதான கடற்கரை புத்தர்சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பான வழக்கில் திருகோணமலை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரரை சுகம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை சிறைச்சாலைக்கு வெள்ளிக்கிழமை (16) காலை வருகைதந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்களை சந்தித்து உரையாடியிருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கலந்துரையாடிவிட்டு பின்னர் வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து நலன் விசாரிப்பதற்காக சிறைச்சாலைக்கு வருகை தந்தேன்.

தேசிய மக்கள் சக்தி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடலோர பாதுகாப்பு திணைகள் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நல்ல விதமாக அரசியல் செய்யக் கூடியவராக இருந்தால் அல்லது நல்ல உள்ளம் படைத்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் மதம் தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து உயர் மட்டங்களுடன் பேசி ஏதாவது ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கலாம்.

அந்த அரசியல்வாதியின் ஆசைகளை நிறைவேற்றும் முகமாகவே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இறுதியாக சிக்கலில் மாட்டப்போவது கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளே எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கஸ்ஸப தேரரின் உண்ணாவிரதம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி கேட்கப்பட்டபோது, அரிசிமலை விகாராதிபதி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தினை கஸ்ஸப தேரர் தற்காலிகமாக கைவிட்டுள்ளதாகவும் எதிர்வரும் 19ஆம் திகதிக்குப்பின்னர் ஏற்படுகின்ற நிலைமையைப் பொறுத்து உண்ணாவிரதம் தொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.