ஆந்திர முதல்வர் ஜெகன் மீது கல்வீசி மண்டை உடைப்பு

14.04.2024 08:02:00

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தேர்தல் பிரசார பஸ் யாத்திரையில் ஈடுபட்டார். அப்போது மர்ம நபர் கல் வீசியதில் ஜெகன்மோகன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ‘நாங்கள் சித்தம்’ எனும் தேர்தல் பிரசார பஸ் யாத்திரையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மேற்கொண்டு வருகிறார். 10வது நாளான நேற்று மாலை என்டிஆர் மாவட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் பஸ் யாத்திரை மேற்கொண்டார்.

விஜயவாடா மத்திய தொகுதியில் உள்ள சிங் நகரில் முதல்வர் ஜெகன்மோகன் நேற்றிரவு யாத்திரை மேற்கொண்டு திறந்த பஸ் மீது நின்றபடி பேசிக்கொண்டிருந்தார். அவர்களது கட்சியினர் பிரம்மாண்ட கஜ மாலையை கிரேன் மூலம் கொண்டு வந்து ஜெகன்மோகனுக்கு அணிவிக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வர் ஜெகன்மோகன் மீது கல் வீசினார். அந்த கல் நேராக ஜெகன் மோகன் நெற்றியில் விழுந்து ெதறித்தது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. கல் தெறித்து விழுந்ததில் முதல்வர் ஜெகன்மோகன் அருகில் இருந்த எம்எல்ஏ சீனிவாசனுக்கும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

இதைப்பார்த்த முதல்வரின் பாதுகாவலர்கள் மற்றும் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை பாதுகாப்பாக சிறப்பு பஸ்சில் உள்ளே அழைத்துச்சென்று, முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரின் மண்டையை உடைத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட போதும் முதல்வர் ஜெகன்மோகன் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள அமோக வரவேற்பை கண்டு அச்சமடைந்துள்ள எதிர்க்கட்சியினர் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெகன்மோகன் குற்றம் சாட்டினார். முதல்வர் மீது கல்வீசி உள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.