கபில சந்திரசேனவின் மரணம் தற்கொலையல்ல!
|
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் என்பது வெறும் தற்கொலை அல்ல, அது ஒரு தற்கொலைக்கான தூண்டுதல் என்பது தற்போது மிகத் தெளிவாகத் தெரியவந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். |
|
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக தற்போது பல்வேறு மர்மமான தகவல்கள் கிடைத்து வருகின்றன எனவும் குறிப்பாக அவருக்குப் பிணை வழங்குதல் மற்றும் அந்தப் பிணையை எதிர்த்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் தமது கட்சித் தரப்புத் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். மிக விரைவில் இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைத் தாம் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகக் கூறிய அவர், இது திட்டமிட்ட முறையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒரு சம்பவம் என்பதை வலியுறுத்தினார். மறைந்த கபில சந்திரசேனவை மரண அச்சுறுத்தல் விடுத்து, அவரிடமிருந்து பலவந்தமான முறையில் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், அந்த வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை வலுக்கட்டாயமாகச் சேர்க்குமாறு அவர் வற்புறுத்தப்பட்டார் என தெரிவித்தார். இவ்வாறான பலவந்த அச்சுறுத்தல்கள் குறித்து கபில சந்திரசேன உயிருடன் இருந்தபோதே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு பலவந்தமான முறையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டுக்காக உழைத்த தலைவர்களைச் சட்டவிரோதமாகச் சிக்க வைக்க அரசாங்கம் முயலுமானால், அதற்கு எதிராக நாட்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என அவர் எச்சரித்தார். |