நெருக்கடியை பரிசளிக்க தயாராகும் கனேடிய மாகாணம்!

14.12.2024 09:20:40

வரி விதிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஒன்ராறியோவின் முதல்வர் இன்னொரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடிவு செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது உறுதி என்று கூறியிருக்கிறார்  

இந்த நிலையில், கனடாவின் மிகவும் பிரபலமான மாகாணம் ஒன்று, ட்ரம்பின் மிரட்டலை அதே பாணியில் எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக மதுபானங்களைக் கொள்முதல் செய்யும் மாகாணமான ஒன்ராறியோ, தற்போது அமெரிக்க மது பானங்களை இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவுக்கு வர இருக்கிறது.

இந்த வார தொடக்கத்தில், ஒன்ராறியோவின் முதல்வரான டக் ஃபோர்டு, பல அமெரிக்க மாகாணங்களுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதை நிறுத்தலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த மிரட்டல் டொனால்டு ட்ரம்பை கொஞ்சமும் அசைக்கவில்லை. டக் ஃபோர்டு அவ்வாறு முடிவெடுப்பார் என்றால், அது பரவாயில்லை என ட்ரம்ப் பதிலளித்திருந்தார்.

மட்டுமின்றி, அமெரிக்கா கனடாவுக்கு மானியம் அளிக்கிறது, நாங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டொலர் கனடாவுக்கு மானியமாக வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இனி அதன் தேவை இருக்காது என்றார்.

ஆனால், மிக நெருக்கமான ஒரு குடும்ப உறுப்பினர் மார்பில் கத்தியால் தாக்கியது போன்ற நிலை இதுவென, ட்ரம்பின் 25 சதவிகித வரி விதிப்பை டக் ஃபோர்டு விமர்சித்திருந்தார்.

1927 முதல் ஒன்ராறியோவின் மதுபான கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 7 பில்லியன் கனேடிய டொலர் வருவாய் ஈட்டுகிறது.

மட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம் உட்பட எரிசக்தி பொருட்களின் விற்பனையானது 170 பில்லியன் கனேடிய டொலர்களை தொட்டுள்ளது.

தற்போது மதுபானங்களின் இறக்குமதியை ஒன்ராறியோ கைவிடும் என்றால், ட்ரம்புக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.