சகோதரத்துவம் நிறைந்த ஒரே இலங்கை தேசத்தவராக எழுச்சிபெறுவோம்
இஸ்லாமிய அடியார்களால் ஒரு மாத காலமாக அநுட்டித்த நோன்பு காலத்தின் நிறைவினைக் குறிக்கின்ற ரமழான் பெருநாள் இந்த ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி பிறந்துள்ளது. அந்த பெருநாளைக் கொண்டாட ஒன்றுசேர்கின்ற இலங்கை இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது என்று அநுர குமார திசாநாயக்க நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அன்றாட வாழ்க்கையில் சிரமங்களை பொறுமையுடன் தாங்கிக்கொண்டு ஒருமாத காலமாக அநுட்டிக்கின்ற நோன்பு மூலமாக சேமித்துக்கொள்கின்ற செல்வத்தை தமது சகோதர மக்களுக்கு உதவும்பொருட்டு பாவனைக்கு எடுத்தல் ரமழான் வைபவத்தின் நோக்கமாகும். ரமழான் வழிபாட்டு முறைகளானது நிகழ்கால ஊழல்மிக்க சமூக முறைமையால் மனிதர்கள் மத்தியிலிருந்து பலவந்தமாக தூரவிலக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற மனிதம் மற்றும் பொதுநலம் ஆகிய பண்புகளை மீண்டும் வாழ்க்கைக்குள் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனமாக அமைகின்றது.
எழுபத்தாறு வருடகால ஊழல்மிக்க அரசியலால் நாடும் மக்களும் தள்ளப்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவினை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அத்துடன் அதிகாரவேட்கைமிக்க அரசியல் தேவைகளுக்காக இனவாதம், மதவாதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்துவைக்கின்ற கொடிய போக்குகள் மற்றும் அதற்காக பெருநிலத்தில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடிய விதத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். எவ்வாறாயினும் இந்த ஊழல்மிக்க அதிகாரமோகம்கொண்ட அரசியல் கலாசாரத்தையும் அதன் மூர்க்கத்தனமான தேவைகளையும் இன்றளவில் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் உணர்ந்து நிராகரித்து முன்நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது. இந்த மக்கள் அபிப்பராயத்தைக் கண்டே ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள். மக்கள் அனைவருக்கும் தமது இனத்தை விஞ்சியதாக சகோதரத்துவத்துடன் பின்னிப்பிணைந்த ஒரே இலங்கை தேசத்தவராக எழுச்சிபெற சகோதரத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட ரமழான் பெருநாள் காட்டுகின்ற வழியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.
இலங்கை தேசத்தில் புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை ஆரம்பிக்க தயாராகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வருடமொன்றில் ரமழானைக் கொண்டாடுகின்ற இஸ்லாமிய அடியார்களுக்கு சகோதரத்துவத்தின் நாமத்தால் ஒரே இலங்கைத் தேசத்தவராக கைகோர்த்துக்கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுகிறோம் என்றுள்ளது.