17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

28.03.2024 08:19:15

”நாட்டின் அரசியலமைப்பின்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால்
எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். எதிர்க்கட்சியினரிடம் தீர்க்கமான முடிவு இல்லாததால்,
அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதாக போலியான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் பலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணிக்கு உள்ளது.

அனைவருக்கும் சமமான சட்டத்தை அமுல்படுத்துவதே எமது நோக்கமாகும். நாட்டின் பொருளாதாரத்தை கையாள்வது தொடர்பில் மேலும் சில விசேட சட்ட மூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததை அடுத்து, இனி பணத்தை அச்சிட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

அரசியலமைப்பின்படி ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்பின்னர் அரசியலமைப்பின்படி பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” இவ்வாறு வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.