அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சி கட்டிலில் ஏற முடியாது.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் மற்றும் அவரது அரசியல் நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி அடுத்த 30 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆட்சி கட்டிலில் ஏற முடியாது என்று அவர் சாடியுள்ளார். மேலும், ராகுல் காந்தி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை குறிப்பிட்ட அவர், பாஜகவினர் வாக்குச்சாவடி நிலை முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை மக்களுடனேயே தொடர்ந்து தொடர்பில் இருந்து உழைத்து வருவதாக தெரிவித்தார்.
தேர்தல் முறைகள் மற்றும் வாக்குரிமை விவகாரங்களில் ராகுல் காந்தி மற்றும் அவரது கூட்டணி கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டினார். நீதிமன்றத் தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாக வந்தால் நீதி நிலைபெறுவதாக கூறும் காங்கிரஸ், எதிராக வந்தால் நீதிமன்றங்களையே கேள்விக்குள்ளாக்குவதாகவும் அவர் விமர்சித்தார்.
டெல்லியில் நடத்தும் போராட்டங்களால் மக்களின் தீர்ப்பை எப்போதுமே மாற்றிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், சட்டவிரோத ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் முயல்வதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.