இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை

24.07.2021 10:45:14

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மாணவ-மாணவிகள் விடுதிகள் நல்ல தரத்துடன் செயல்பட விடுதிகளில் போதிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மதுரையில் இன்றுஆய்வு செய்தார்.

அப்போது மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள அரசு சிறுபான்மையினர் மாணவர் விடுதியில் ஆய்வு செய்த அவர் அங்கு மாணவர்களுக்கு செய்யப்பட்டு வரும் சலுகைகள் மற்றும் அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார்.

மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பான முறையில் அவர்களுக்கு போதிய உணவை சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க் கள் தளபதி, பூமிநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-

முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் அவரவர் துறை தொடர்பான வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். இது மக்களுக்கான அரசு. முதலமைச்சர் மக்களின் நலனை பெரிதும் மதித்து மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மாணவ-மாணவிகள் விடுதிகள் நல்ல தரத்துடன் செயல்பட வேண்டும். என்ற முதலமைச்சரின் உயரிய சிந்தனையை நிறைவேற்றுகின்ற பணியில் ஈடுபட்டுள்ளார்.

விடுதிகளில் போதிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.வெளிநாடு வாழ் தமிழர்கள் விவகாரத்தில் பாதிக்கப்படுகின்ற தமிழர்களின் துயர் துடைக்க உடனுக்குடன் உதவிடும் பணிகளை செய்து வருகிறோம்.

இலங்கை தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் தங்கியுள்ள முகாம்களில் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் பெற்று தரவும் முதலமைச்சர் ஆர்வமாக இருக்கிறார்.