ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது
பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடாத்தினால் கூட அரசாங்கத்தினால் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது எனதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலே முதலில் நடைபெறவேண்டும் என தனதுகட்சி விரும்புவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறித்த ஐலண்ட் நாளிதழின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் தனது ஆயுட்காலத்தின் இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்த பின்னர் ஜனாதிபதியால் அதனை கலைக்க முடியும் புதிய தேர்தலை அவர் நடத்தலாம் ஆனால் ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலிற்கு முன்பாக பொதுத்தேர்தலை நடத்துவது மிகவும் சவாலான விடயமாக காணப்படும் என தெரிவித்துள்ள சமன் ஸ்ரீ ரட்நாயக்க ஆனால் எவ்வாறான நெருக்கடிகள் சவால்கள் காணப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலை பிற்போடமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தால் தேர்தலிற்கான நிதியை எவ்வாறு பெறுவதற்கு தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்ற கேள்விக்கு அவ்வாறான நிலைமையேற்பட்டால் ஜனாதிபதி ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து நிதியை ஒதுக்கவேண்டு;;ம் என அவர் தெரிவித்துள்ளார்.2024 வரவு செலவுதிட்டத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.