நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

16.08.2025 09:46:15

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) பிரான்ஸ் குடியரசுத் தலைவர் எம்மானுவேல் மக்ரோனுக்கும் (Emmanuel Macron ), கனடா பிரதமர் மார்க் கார்னிக்கும் (Mark Carney), அவர்களது நாடுகள் பாலஸ்தீன நாட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் அங்கீகரித்ததற்காக வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளது. மேலும், ஐக்கிய இராச்சிய பிரதமர் கியர் ஸ்டார்மருக்கும் (Sir Keir Starmer), ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசுக்கும் (Anthony Albanese), பாலஸ்தீன் நாட்டை அங்கீகரிக்கும் பாதையை வகுத்ததற்காகவும் வாழ்த்து கடிதங்களை அனுப்பியுள்ளது.

இந்தக் கடிதங்களில், 2024 ஜனவரி 6 அன்று TGTE அரசவை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத் தீர்மானத்தில், இஸ்ரேல்–பாலஸ்தீன போரில் உடனடி போர்நிறுத்தமும், இரு நாடு தீர்வும் (two states solution ) கோரப்பட்டதுடன், அந்தத் தீர்வு முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அப்பகுதியில் ஐ.நா. அமைதிப் படைகள் இருக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தியது.

வாழ்த்து செய்திகளில் TGTE, பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் முடிவு (ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, அங்கீகாரம் நோக்கிய பாதையை வகுத்திருக்கும் முடிவு) என்பது தார்மீகத்துணிவு, நீதி மற்றும் ஜனநாயகத் துணிவு ஆகியவற்றின் வெளிப்பாடு எனும் தனது நிலைப்பாட்டையும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், இம் முக்கியமான அங்கீகாரங்கள் சர்வதேச சட்ட ஆட்சி மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்தும் என்று TGTE நம்புகின்றது என கடிதங்களில் குறிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீன மக்களின் உட்கிடையான சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் பிரான்ஸ், கனடா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா ஆகியவற்றின் நிலைப்பாடு, உலகின் அனைத்து தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து செயலுருவம் கொடுக்கும் வகையில் விரிவடைய வேண்டும் என்ற TGTE-யின் எதிர்பார்ப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்கான சர்வதேச பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற TGTE-யின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் இந்த உயர்மட்ட கடிதங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

இக் கடிதங்கள், இரு எதிர்கால நோக்குச் செய்திகளுடன் நிறைவடைந்துள்ளன: ஒன்று, பிரான்ஸ், கனடாவின் பாலஸ்தீன அங்கீகாரம் (மற்றும் ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா ஆகியன அங்கீகாரம் நோக்கி எடுத்த பாதை) இஸ்ரேல்–பாலஸ்தீன போர் தொடர்பான கொள்கைகளிலும் மற்றும் நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற TGTE-யின் எதிர்பார்ப்பு. மற்றையது, இவ் அங்கீகாரங்கள் தார்மீகம், சட்டம், மற்றும் ராஜதந்திர வலிமையை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், அவை மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமைதியையும், அப்பகுதி மக்களின் துயரத்திற்கு முற்றுப்புள்ளியையும் கொண்டு வர வேண்டும் என்ற TGTE-யின் பெரும் நம்பிக்கை.