'எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

23.04.2026 14:28:55

கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனு தாக்கல் என அனைத்தும் முடிந்து தமிழகத்தில் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு என்பது தொடங்கி இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் பிரபலங்கள் தாங்கள் ஜனநாயகக் கடமையாற்றியதை சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி 175-ல் தனது வாக்கை குடும்பத்தோடு வாக்கு பதிவு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், ''எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் என்பது களத்தில் இளைஞர்கள் மத்தியில் வெற்றியை தேடித்தரும்.

நான் என் தொகுதிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்துள்ளேன். நான் எப்படி உழைக்கிறேன் என்று எனது மக்களுக்கு தெரியும். எனவே அதற்குரிய தகுதியை எனக்கு தருவார்கள்'' என துரைமுருகன் கூறினார்.