புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம்.
95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை, இன்று தொழில்நுட்பத்தால் போஷிக்கப்பட்ட, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் புதிய பாதையில் பிரவேசித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டுத் தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டு, இன்று(15) ராஜகிரிய மத்திய வங்கி கற்கை மையத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
தேர்தல் மின்னணு சேவைக்கு (E-Services) 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை வெளியீடும் இதன்போது இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மேலும் உரையாற்றிய பிரதமர்,''ஜனநாயகத்தின் இதயத்துடிப்பு சட்டத்தின் ஆட்சியேயாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும். எந்த அந்தஸ்திலுள்ள ஒருவரையும் சட்டத்திற்கு மேலாக இருக்க அனுமதிக்கலாகாது. கடந்த காலத்தில் இழக்கப்பட்டிருந்த சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தற்போதைய அரசாங்கம் குறிப்பிடத்தக்க மற்றும் நடைமுறைச் சாத்தியமான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
முதலாவதாக, அரசியல் தலையீடுகள் இன்றிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பூரண சுதந்திரம் பொலிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதித்துறைக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. எத்தகைய அரசியல் அழுத்தங்கள் வந்தபோதிலும் குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராகச் சட்டம் மிக நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படும்.
அடுத்ததாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பொதுப் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர்கள், அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் மற்றும் லஞ்சம் வாங்கியவர்களுக்கு எதிராகக் கட்சிப் பேதமின்றி, நிறப் பேதமின்றி விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், எமது நாட்டிற்குப் பெருமளவில் வெளிநாட்டுச் செலாவணியை அனுப்பி நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும், ஆனால் இதுவரை வாக்களிக்கும் உரிமையை இழந்திருந்த புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான வழிமுறையைச் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எமது ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்தும் மிக முக்கியமானதொரு முன்னெடுப்பாகும்.
மேலும், அரச கொள்முதல் நடைமுறை, ஒப்பந்தங்களை வழங்குதல் மற்றும் அரச கொள்வனவுகள் என்பவற்றை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கி வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் மோசடி மற்றும் ஊழல் நடக்கும் வழிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அரச சேவையை மக்களுக்கு மரியாதையுடன் பணியாற்றும் வெளிப்படைத்தன்மை மிக்கதொரு பொறிமுறையாக மாற்றியமைத்து வருகிறோம்.
அத்தோடு, அரசாங்கம் தமது கொள்கையாகக் கருதும் 'எவரையும் கைவிடாத' அணுகுமுறையின் கீழ் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன்புரித் துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தியிருக்கின்றது
95 ஆண்டுகால சர்வஜன வாக்குரிமைப் பாரம்பரியத்தைக் கொண்ட நாம், இன்று தொழில்நுட்பத்தால் போஷிக்கப்பட்ட, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் புதிய பாதையை வந்தடைந்திருக்கிறோம்.
ஜனநாயகம் என்பது வெறும் காகிதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட வசனத் தொகுப்பல்ல. அது ஆட்சியாளருக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே உள்ள உண்மையான நம்பிக்கையாகும். 2024 இல் எமது மக்கள் எடுத்த அந்தத் தீர்க்கமான முடிவு, இன்று வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, டிஜிட்டல்மயமாக்கல், சமகால வளர்ச்சி மற்றும் உண்மையான மக்கள் நல ஆட்சியாக மலர்ந்து வருகிறது.
அனைவரினதும் நோக்கம் இனம், மதம், சாதிப் பேதமின்றி, அனைவருக்கும் உரிமையுள்ள, ஜனநாயகமான, சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நியாயமான இலங்கையை எதிர்காலச் சந்ததிக்காகக் கையளிப்பதாகவே இருக்க வேண்டும்.'' எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ், ஆசிய-பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் லீனா ரிக்கிலா தமாங் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.