பாராலிம்பிக் துவக்க விழாவில் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்பில்லை

24.08.2021 14:36:16

பாராலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு பங்கேற்கமாட்டார் என கூறப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்கும் 16வது பாராலிம்பிக் போட்டி இன்று (ஆக.,24) துவங்குகிறது. செப்.,5 வரை நடக்கும் இப்போட்டியில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர், வீராங்கணைகள் பங்கேற்கின்றனர். உடற்திறன் பாதிப்புக்கு ஏற்ப, ஒரே விளையாட்டு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கும். இதனால் 22 விளையாட்டில் 539 பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன.

துவக்க விழாவில் ஒவ்வொரு நாடுகளின் சார்பில் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும். இந்தியா சார்பில் 5 வீரர், வீராங்கனைகள், 6 அதிகாரிகள் என 11 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இதில், உயரம் தாண்டுல் வீரர் தமிழகத்தின் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்வதாக இருந்தது. இந்நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட சர்வதேச பயணியின் தொடர்பில் மாரியப்பன் இருந்துள்ளார். இதனையடுத்து மாரியப்பனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருப்பினும், துவக்க விழாவில் பங்கேற்க வேண்டாம் என ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவுறுத்தியுள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் பாராலிம்பிக் துவக்க விழாவில் இந்தியாவின் மூவர்ண கோடியை ஏந்திச் செல்லும் கவுரவத்தை மாரியப்பன் தங்கவேலு இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக தேக் சந்த் என்பவர் இந்திய தேசியக் கோடியை ஏந்திச் செல்லவுள்ளார்.