"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி".

23.01.2026 14:14:48

மதுராந்தகத்தில் நடந்த என்டிஏ கூட்டணி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு ரெடியாகிவிட்டதாக குறிப்பிட்ட அவர் திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், என்டிஏ சார்பில் மதுராந்தகத்தில் பிரம்மாண்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

  

கூட்டணிக் கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசிய பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையை பாரத் மாதா கீ ஜே எனச் சொல்லித் தொடங்கினார். அவர் மேலும், "தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். 2026இல் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்குப் பின் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர். ஏரி காத்த ராமனின் திருவடிகளை வணங்குகிறேன்.

எம்ஜிஆர் பிறந்தநாளைச் சமீபத்தில் கொண்டாடினோம். போராடிய வீரர்களுக்குத் தலைவணங்குகிறேன். இந்திய விடுதலைக்காக நேதாஜியுடன் பலர் போராடினர். தமிழர்களின் நாடி நரம்புகளில் வீரம், நாட்டுப்பற்றுள்ளது. ஆட்சி மாற்றத்துக்குத் தமிழகம் தயாராகிவிட்டது. மக்கள் வெள்ளம்போல இங்குக் கூடியுள்ளனர். என்டிஏ கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.

ஆட்சி மாற்றத்திற்குத் தமிழகம் தயாராகிவிட்டது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.. மேடையில் உள்ள தலைவர்கள் தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள்" என்றார். மேலும், திமுக ஆட்சியை அவர் சிஎம்சி ஆட்சி என விமர்சித்தார். அதாவது கரப்ஷன், மாபியா, கிரிமினல்கள் நிறைந்துள்ள ஆட்சியாக திமுக ஆட்சி இருப்பதாக அவர் சாடினார்.