மாரி செல்வராஜ் சொல்லும் கண்ணீர் கதை
துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், தற்போது ‘வாழை’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவின் பெயரில் உருவாக டிஸ்னி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாரி செல்வராஜின் அக்கா மற்றும் மாமன் மகன்களான ராகுல் மற்றும் பொன்வேல் ஆகியோர் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் இணைந்து மேலும் இரண்டு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் ‘தேன் கிழக்கு...’ கடந்த 18ம் தேதி வெளியாகியிருந்தது. இப்பாடல் ஆசிரியர் - மாணவன் உறவை விவரிக்கும் வகையில் அமைந்திருந்தது. யுகபாரதி வரிகளில் அப்பாடலை தீ பாடியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு ஊருல ராஜா...’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை மாரி செல்வராஜ் எழுதியிருக்க, சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே இப்பாடலிலும் கருப்பு வெள்ளை டோனில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும், ‘கழுத்தெல்லாம் கணக்குது... கண்ணீர் பொங்குது..., கோமாளி ராஜா அவன் திண்டாட்டம் போடுறான்..., ஊர்கூடிப் பார்க்கும்போது குத்தாட்டம் போடுறான்...’ என பாடலின் வரிகளுக்கு அந்த நான்கு சிறுவர்கள் படும் கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் விவரிப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.