161 ஊடகவியலாளர்களுக்கு ‘அசிதிசி’ புலமைப்பரிசில்!

15.11.2026 09:40:21

இலங்கையின் ஊடகத்துறையில் தொழில்முறைத் திறனையும் அறிவுசார் ஆற்றலையும் மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் ‘அசிதிசி’ ஊடகப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக, 2026ஆம் ஆண்டில் 161 ஊடகவியலாளர்கள் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையான வரலாற்றில், ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் புலமைப்பரிசில் பெறுவதற்கு இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஊடகப் பிரிவினால் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஊடாக, இதுவரை மொத்தம் 1,233 ஊடகவியலாளர்கள் தமது கல்வி மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

ஊடகத்துறையில் பிரவேசிக்க விரும்பும் இளைஞர், யுவதிகள் மற்றும் ஏற்கனவே இத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் உயர்கல்வி மற்றும் தொழில்முறைப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதற்கமைய, முனைவர் பட்டக் கற்கைகளுக்கு அதிகபட்சமாக 700,000 ரூபாவும், தத்துவமானி, முதுகலைமானி மற்றும் பொதுப் பட்டப்படிப்புகளுக்கு 350,000 ரூபாவும், முதுகலைப் பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் நீண்டகால, குறுகியகால சான்றிதழ் கற்கைகளுக்கு 200,000 ரூபாவும் புலமைப்பரிசிலாக வழங்கப்படுகின்றது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் கொண்டிருப்பதுடன், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களில் குறைந்தபட்சம் இரண்டு வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்துள்ள 18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் இப்புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

 

முழுநேர, பகுதிநேர, பிரதேச மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள், வெளிநாட்டு ஊடகங்களின் தற்காலிக ஊடகவியலாளர்கள், ஊடக நிர்வாகப் பணியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட ஊடகத்துறை சார்ந்த பணியாளர்களுக்கும் இவ்வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் ஊடகத்துறை சார்ந்த கற்கைநெறிகளைப் பின்பற்றுவதற்காக இந்நிதியுதவி வழங்கப்படுவதுடன், புலமைப்பரிசில் பெறுநர்களிடமிருந்து எவ்வித நிதியும் அறவிடப்படுவதில்லை.

கற்கைநெறிக் கட்டணத்தில் 50 சதவீதம் ஆரம்பத்திலும், 25 சதவீதம் இரண்டாவது தவணையிலும் வழங்கப்படுவதுடன், எஞ்சிய 25 சதவீதம் கற்கைநெறியைப் பூர்த்திசெய்து சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னர் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக திறைசேரியினால் 2023ஆம் ஆண்டு 5 மில்லியன் ரூபாவும், 2024ஆம் ஆண்டு 2.5 மில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டு 7 மில்லியன் ரூபாவும், 2026ஆம் ஆண்டு 54.3 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகளவிலான விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையில், அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவினால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் 161 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

போலிச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாகப் பரவும் தவறான தகவல்கள் அதிகரித்துவரும் தற்போதைய சூழலில், ஊடக அறம், ஊடகச் சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறுப்பான செய்தி அறிக்கையிடல் தொடர்பான அறிவை ஊடகவியலாளர்களிடம் மேம்படுத்துவது அவசியமாகியுள்ளது.

 

அந்த வகையில், ஊடகவியலாளர்களின் கல்வித் தகைமைகளையும் தொழில்முறை ஆற்றல்களையும் மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் ஊடகத்துறையின் தரத்தை உயர்த்துவதற்கான முக்கிய முதலீடாக ‘அசிதிசி’ ஊடகப் புலமைப்பரிசில் திட்டம் அமைந்துள்ளது.