செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் ஆதீனங்களுக்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார்- சூரியனார்கோவில் ஆதீனம்

05.08.2023 18:48:29

தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் அந்தந்த அமைப்பு மூலம் நடந்து கொண்டிருக்கிறது. பூஜை முடிந்த பிறகு வழிபாடு செய்யும் போது அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிய வழிமுறை பின்பற்றப்பட வேண்டும். தஞ்சாவூர்: தஞ்சையில் இன்று தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஆன்மீக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகாளார் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;- தமிழகத்தில் 6 லட்சத்து 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் அந்தந்த அமைப்பு மூலம் நடந்து கொண்டிருக்கிறது. கோவில் என்பது தாயின் கருவறை போன்றது. அந்த கோவில் கருவறையில் பூஜை செய்வதற்கு தீட்சிதர்கள் தகுதி உடையவர்கள். பூஜை காலங்களில் அவர்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு வழிபாடு செய்யும் போது அனைவருக்கும் வழிபடுவதற்கான உரிய வழிமுறை பின்பற்றப்பட வேண்டும். தமிழகத்தில் 6-ல் 4 பாகம் நிலங்கள் ஆதீனத்திற்கும், திருக்கோவில்களுக்கும் உள்ள நிலங்கள் ஆகும். அவற்றிற்கு ஆர்.டி.ஆர். என்கிற உரிமை உண்டு. அந்த உரிமையின் பேரில் நஞ்சை, புஞ்சை நிலங்கள், அடிமனை வாடகை, தென்னை மர குத்தகை போன்ற பல வகையான நிலங்கள் உண்டு. அவற்றில் 90 சதவீதம் வருவாய் வரக்கூடிய ரீதியில் தான் உள்ளது. பெரும்பாலான கோவில்கள் அதற்குரிய இடத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. சில கோவில்கள் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ளன. மேலும் பயன்படாத இடத்தில் கட்டப்படும் போது அதற்கு கோர்ட் அனுமதியுடன் தான் அரசு அவற்றிற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று நடைபெற்ற மாநாட்டில் கோவில்களை சிறந்த முறையில் வழிநடத்தி கொண்டு செல்ல வேண்டும். இந்து கோவில்களான சிவம், வைணவம், சைவம், சமணம், பவுத்தம் போன்ற கோவில்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.10 வரையிலும் கட்டணம் வாங்கப்பட்டு வருகிறது. அவற்றை குறைத்து கட்டணம் வசூலிக்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெறப்படும் போது யாரிடம் இருந்து சுதந்திரம் பெறுவது என்ற கருத்தானது வெளிப்பட்டு கொண்டிருந்தது. அப்போது சோழவள நாட்டிலே திருவாவடுதுறை ஆதீனம் மூலமாக பெறலாம் என்கிற யோசனையை ராஜகோபாலாச்சாரியார் முன்வைக்கிறார். 70 ஆண்டுகளாக நேருவின் அலகாபாத் இல்லத்தில் இருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வைத்து தமிழ் ஆதீனங்களுக்கும், தமிழ் சைவத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மத்தியில் கூட்டாட்சி தத்துவம், மாநிலத்தில் சுயாட்சி தத்துவம் தான் நமது கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.