கூட்டணி குறித்து கலந்துரையாட விசேட சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) முன்னின்று நடத்தும் பசில் ராஜபக்சவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவம் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இரு தரப்பினருக்கும் இடையிலான எதிர்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்த பசில் ராஜபக்ச செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினார். தேர்தல் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி உருவாகி வரும் வேளையிலும் எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்று கட்சிகள் விவாதிக்கும் சந்தரப்பத்திலும் இச்சந்திப்பு நடைபெறுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதிக்கு மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக நாடு முழுவதும் அரசியல் பேரணிகளை இந்த குழு ஏற்கனவே நடத்தத் தொடங்கியுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், SLPP, ஒரு கட்சி என்ற வகையில், இதுவரை எந்த முறையான முடிவையும் எடுக்கவில்லை.
கட்சியில் இருந்து பிரிந்து சென்ற குழுவொன்றுடன் தாம் நேரடியாகத் தொடர்புகொண்டமை தொடர்பில் ஜனாதிபதியிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக ராஜபக்ச ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
உள்ளக வட்டாரங்களின்படி, நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.