யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ணம்: ஸ்பெயின்- இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் !
2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அந்த வகையில் தற்போது இந்த தொடரில், காலிறுதிப் போட்டிகள் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இதன்படி உள்ளூர் நேரப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், சுவிஸ்லாந்து அணியும் ஸ்பெயின் அணியும் மோதின.
சென்.பீட்டர்ஸ்பர்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயின் அணி பெனால்டி சூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
முன்னதாக போட்டி நேரத்தில் இரு அணிகளும் தலா 1 கோலை அடித்தன. இதில் ஸ்பெயின் அணிக்கு சுவிஸ்லாந்து அணி வீரரான டென்னிஸ் சக்கரியா 8ஆவது நிமிடத்தில் ஒன் கோலொன்று அடித்துக் கொடுத்தார்.
சுவிஸ்லாந்து அணி சார்பில், ஸெர்தான் சக்கீரி போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி பெனால்டி சூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், இத்தாலி அணியும் பெல்ஜியம் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அலையன்ஸ் விளையாட்டரங்களில் நடைபெற்ற இப்போட்டியில், இத்தாலி அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
இத்தாலி அணி சார்பில், நிக்கோலோ பெரெல்லா போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், லொரேன்சோ இன்சைன் 44ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
பெல்ஜியம் அணி சார்பில், ரொமேலு லூக்காக்கு 47ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.
எதிர்வரும் 7ஆம் திகதி வெம்ப்ளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், இத்தாலி அணியும் ஸ்பெயின் அணியும் மோதவுள்ளன.