தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேசம் குரல் கொடுக்க வேண்டும்

26.08.2023 15:55:23

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பௌத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையினத்தவர்களினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடாவடிதனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மயிலத்தனை மடு மக்களின் கோரிக்கைக்கு இணங்க கடந்த 23 ஆம் திகதியன்று அங்கு சென்றிருந்த சர்வமத குருமார்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு மக்களை சந்தித்து திரும்பி வரும் வழியில் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக நடாத்தப்பட்டுள்ளதுடன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் ஒரு இன கலவரத்திற்கு ஆரம்பமாகவே அமைந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள கொண்டு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.