11 சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவு அச்சத்தில் மக்கள்!

30.11.2021 07:21:36

நாட்டில் சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியிலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை கேகாலை, கொழும்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் 5 வீடுகளில் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய இம்மாதத்தில் மாத்திரம் இதுபோன்ற 11 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஆராச்சிக்கட்டு

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பினை பற்றவைத்த போது சிலிண்டரின் மேல் பாகத்தில் தீப்பற்றியுள்ளது. 

சம்பவத்தின் போது வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீ பரவ முன்னர் அதனைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த வீட்டிலிருந்த பெண் தெரிவிக்கையில் , 

‘நேற்றைய தினம் (சனிக்கிழமை) எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றிலிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்தோம். அதனை பொருத்தி அடுப்பை பற்ற வைத்த போதே இவ்வாறு தீ பற்றியது. எனினும் அயலவர்களுடன் இணைந்து விரைந்து செயற்பட்டு சிலிண்டரை வெளியில் எறிந்ததோடு, தீயையும் கட்டுப்படுத்தி விட்டோம். 

இதனை சரியாக அவதானிக்காமல் இருந்திருந்தால் நானும் எனது தாயும் தீக்கிரையாகியிருந்திருப்போம் என்று குறிப்பிட்டார். ஆராச்சிகட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கேகாலை

இதேபோன்று கேகாலை மாவட்டத்தில் புளத்சிங்கள வீதி – ரொக்ஹில் பகுதியிலும் சமையல் எரிவாயு கசிந்து வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த வீட்டிலிருந்த நபர் தேநீர் தயாரிப்பதற்காக சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைத்து குளிக்கச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது வீட்டிலிருந்த அந்த நபர் தெரிவிக்கையில் , 

‘தேநீர் தயாரிப்பதற்காக சமையல் எரிவாயு அடுப்பினை பற்ற வைத்து குளியல் அறைக்குள் சென்றேன். சென்று சிறிது நேரத்தில் குண்டு வெடிப்பதைப் போன்ற பாரிய சத்தம் கேட்டது. உடனே சென்று பார்த்த போது அடுப்பு முழுமையாக வெடித்து துகள்களாக சிதறியிருந்தது. எனினும் சிலிண்டருக்கு எவ்வித சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. வெடிப்பின் போது நான் அருகில் இருந்திருந்தால் எமது உடற்பாகங்களும் சிதறியிருந்திருக்கும்.’ என்று குறிப்பிட்டார்.

ஜாஎல

ஜாஎல – துடெல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சமைத்து முடிந்ததன் பின்னர் எரிவாயு அடுப்பினை அணைத்த பின்னரே பாரிய சத்தத்துடன் வெடித்ததாக குறித்த வீட்டிலுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர்

மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. எனினும் இதன் போது வீட்டு சமையலறை சேதமடைந்துள்ள போதிலும் , எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை

திருகோணமலை – கிண்ணியா , ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிவாயு அடுப்பு வெடித்து தீப்பற்றியுள்ளது. இதன் போது வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவத்தில் எவ்வித உயர் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஸ்சோவிட – எரிவாயு கசிவு

கொழும்பு – பொல்கஸ்சோவிட்ட பிரதேசத்தில் ரணவிரு பிரேமசிறி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் உரிமையாளர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தான் கொள்வனவு செய்த சமையல் எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

சிலிண்டரை அடுப்புடன் பொருத்துவதற்காக அதிலுள்ள மூடியைத் திறந்த போது சத்தத்துடன் வாயு வெளியேறியதாக அவர் கூறினார்.

இதன் காரணமாக எரிவாயு சிலிண்டரை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி அதன் வாய்ப்பகுதியில் சவர்க்கார நுரையினை இட்டு அவதானித்த போது நுரை பொங்கியதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதத்தில் 11 வெடிப்பு சம்பவங்கள்

இந்த இரு சம்பவங்களுடன் நாட்டில் இம் மாதத்தில் மாதத்தில் இதுவரையில் இதுபோன்ற 11 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 4 ஆம் திகதி வெலிகம –  கப்பரதொட்ட பகுதியிலுள்ள உணவகமொன்றிலும் , 16 ஆம் திகதி இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றிலும், 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலின் பார்வையாளர் கூடத்திற்கருகிலிருந்த உணவகத்திலும் , 25 ஆம் திகதி பன்னிப்பிட்டிய – கொட்டாவ வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலும் அன்றைய தினத்திலேயே குருணாகல் – நிக்கவரெட்டி பொலிஸ் பிரிவில் கந்தேகெதர பிரதேசத்திலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் போது எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும் சிலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

எனினும் பொலன்னறுவை மாவட்டம் வெலிகந்த – சுதுன்பிட்டி பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி வீட்டில் தனித்திருந்த குறித்த யுவதி எரிவாயு அடுப்பினை பற்றவைக்க முயற்சித்த போது இடம்பெற்ற வெடிப்பின் போது படுகாயமடைந்து 12 நாட்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான வெடிப்பு சம்பவங்களுக்கு பாவனையாளர்களின் கவனயீனமே காரணம் என்று உயர் அதிகாரிகளால் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக பதிவாகும் இந்த வெடிப்புக்களின் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலிருந்து சமையல் எரிவாயு மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பாவனையாளர்கள் அவதானமாக செயற்பட வேண்டும்

எவ்வாறிருப்பினும் எந்த வகை சமையல் எரிவாயுவை உபயோகித்தாலும் மக்கள் அது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டரினை கொள்வனவு செய்பவர்கள் அதனை பொருத்தும் போது ஏதேனும் கசிவு காணப்படுகிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.

கசிவு ஏற்படுவதை அவதானித்தால் அதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு சமையல் எரிவாயு சிலிண்டர்களை காற்றோட்டமுடைய இடங்களில் வைத்து உபயோகிப்பது ஓரளவிற்கு பாதுகாப்பானதாகும்.