நடிகை ஜாக்குலின்

14.09.2022 10:00:00

டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி ஜாக்குலின் பெர்னான்டசுக்கு சம்மன். டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு நேற்று சம்மன் அனுப்பியிருந்தனர்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு சேர்த்து இருந்தது. சுகேஷிடம் இருந்து ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தனர்.


ஜாக்குலின் பெர்னான்டசுக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. ஆனால் இரண்டு சம்மனுக்கும் ஜாக்குலின் ஆஜராகவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் ஆஜராக இயலாது என்று ஜாக்குலின் போலீசுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தள்ளி வைத்து, இன்னொரு தேதியில் ஆஜராக மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இன்று (14.09.2022) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் இன்று ஆஜரானார்.