நவாலி படுகொலையின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை. இன்று அதன் நினைவுநாள். யாழ்ப்பாணம் நவாலியில் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள்!! 147 பேர் பலியாகினர்.
நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.
கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன. யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீீது கொட்டி வெறி தீர்த்தன.
இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச் செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலைசெய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது. இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.