I.M.F பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகை

20.06.2022 05:25:57

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) பிரதிநிதிகள் குழு இன்று (20) நாட்டுக்கு வருகை தரவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பிலான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச்செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த பிரதிநிதிகள் குழு, ஜூன் 30 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டிற்கு தற்போது வருகை தந்துள்ள இலங்கைக்கான கடன்களை மறுசீரமைப்பதற்கான நிதி,  சட்ட ஆலோசனை நிறுவனங்களான லஸாட் மற்றும் கிளிஸ்போட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், கண்காணிப்பு நடவடிக்கைகளை
ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஐ.எம்.எஃப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.